சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் இன்று(டிச. 10) ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விமான ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து 9-வது நாளாக இண்டிகோ நிறுவனம் சிக்கலை சந்தித்துள்ளது.
சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும், தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் என 14 இண்டிகோ சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து 9-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஏராளமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து, புதிய விதிமுறைகளில் இருந்து விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விலக்கு அளித்திருக்கும் நிலையில், நிலைமை படிப்படியாக சீராகி வருகின்றது.
இன்னும் ஓரிரு நாளில் இண்டிகோ விமான நிறுவனத்தின் பிரச்னை முழுமையாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.