அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், அமலாக்கத் துறை ஆதாரம் கொடுத்தும் கூட வழக்கு பதிய மறுக்கிறார்கள். அமலாக்கத் துறை எழுதிய கடிதத்தில் கட்சி நிதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெற்றுள்ளனர். முதல்வர், அமைச்சர் நேரு ஆகியோர் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
ஆதாரம் கொடுத்தும் கூட வழக்கு பதிய மறுக்கிறார்கள் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எஸ்ஐஆர் மூலம் 77 லட்சம் வாக்காளர்கள் இறப்பு, இடமாற்றம் என வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை. எங்களைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 80 லட்சம் பேர் நீக்கப்பட வேண்டும். ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக இம்பீச்மெண்ட் மனு கொடுத்துள்ளனர். 8 ஆண்டுகளில் 75,000 வழக்குகளை தீர்த்து வைத்தவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
தீர்ப்பு கொடுத்தால் இப்படி நடக்கும் என நீதிபதிகளுக்கு பயத்தை திமுக கொடுத்துள்ளது. நீதிபதியின் மாண்புக்கு பங்கம் விளைவித்துள்ளனர். நேர்மையாக பணியாற்ற இடமில்லை. திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே கல் கிடையாது. அரசு பொய் மீது பொய் கூறுகிறது. அமித் ஷா, நட்டாவுடன் பூட்டிய அறையில் பேசியதை பொதுவெளியில் பேச முடியாது. கூட்டணியில் ஒருவர் இருந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
2024 தேர்தல் அனுபவங்களில் இருந்து சில கருத்துகளை கூறியுள்ளோம். பாஜக - அதிமுக கூட்டணிக்கு இன்னும் வலிமையான கட்சிகள் வரும். ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சந்தித்தோம், கூட்டணியில் யார் இணைவது என அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் முடிவு செய்வர். தமிழ்நாட்டில் பாஜக முதலிடத்தை பிடிப்பது எளிதல்ல. தமிழ்நாட்டில் 3ஆவது அணி வெற்றி பெறுவதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.