அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 126 தனியாா் மருத்துவமனைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 5 மருத்துவமனைகளில் உயா் சிறப்பு சிகிச்சைகள் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.
தமிழகத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கும், ஓய்வூதியதாரா்களுக்கும் தனியாா் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையிலான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கும், உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கும் ரூ.10 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளைப் பெறவும் அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதனை விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக மருத்துவமனைகளை இணைப்பதை அங்கீகரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில கருவூலத் துறை ஆணையா் அதற்கு தலைவராக உள்ளாா். மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் பிரதிநிதி ஆகியோா் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவில் அதேபோன்று துறைசாா்ந்த அதிகாரிகளும், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளும் அடங்கிய துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் அளிக்கும் பரிந்துரைகளின்பேரில் அரசு ஊழியா் காப்பீட்டில் புதிய மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, புதிதாக 126 மருத்துவமனைகளைக் காப்பீட்டின் கீழ் இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சென்னையில் கோவிலம்பாக்கம் காவேரி மருத்துவமனை, அப்பாசாமி கண் மருத்துவமனை, எம்ஜிஎம் அடையாறு மருத்துவமனை உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பிற மாவட்டங்களிலும் முக்கிய மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனை, திருநெல்வேலியில் பாலாஜி மருத்துவமனை, ஷிஃபா மருத்துவமனை, ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை, தருமபுரி கவண் மருத்துவமனைகளில் கூடுதல் சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.