தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. இன்றைய நாளில் பெயர் விடுபட்டவர்களின் கேள்வி படிவம் 6-ஐப் பற்றியதுதான்.
அந்த படிவம் எப்படி இருக்கும்? அதனை எளிதாக பூர்த்தி செய்ய முடியுமா? அந்த படிவத்தை பூர்த்தி செய்து என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும் என்பது குறித்த தேடல் இன்று முதல் அதிகரிக்கத் தொடங்கும்.
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்திலும் 97 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்கள் தவிர்த்து மற்றவர்கள் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த படிவத்தைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாரந்தோறும் இரண்டு முறை நடக்கும் முகாம்களில் பங்கேற்று வழங்கலாம். முதற்கட்டமாக அந்தந்த பிஎல்ஓக்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிவம் 6 பூர்த்தி செய்வது எப்படி?
படிவம் 6 தமிழில் கிடைக்கிறது. அதில், பெயர், குடும்பப் பெயர், பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் விவரங்கள், பிறந்த தேதி ஆகியவற்றை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க விவரம் என்னவென்றால், பெயரை மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் எழுத வேண்டும். இல்லாவிட்டால் தமிழில் எழுதப்பட்ட பெயர் ஆங்கிலத்தில் மென்பொருளால் எழுத்துப் பெயர்ப்பு செய்யப்படும் என்று பொறுப்பு துறப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்களாக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், 10 அல்லது 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள், கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
மேற்கண்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத நிலையில் பிறந்த தேதியை உறுதி செய்ய இணைத்திருக்கும் ஆவணத்தை குறிப்பிட வேண்டும்.
இருப்பிடச் சான்றுக்காக, விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பிப்பவரின் உறவினர் அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர் வாக்காளர் பட்டியலில் இதே முகவரியில் இருந்தால், அவரது பெயரில் இருக்கும் மின் கட்டண அட்டை, எரிவாயு இணைப்பு ரசீது, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, வங்கி அல்லது அஞ்சல் கணக்குப் புத்தகம் போன்றவற்றை இணைக்கலாம்.
இருப்பிடச் சான்றுக்கு வேறு ஏதேனும் ஆவணங்களை இணைத்திருந்தால் அது பற்றியும் குறிப்பிட வேண்டும்.
இதே முகவரியில் உள்ள உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர் மற்றும் உறவு, வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தின் இறுதியில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அதனை விண்ணப்பதாரர்கள் படித்து பூர்த்தி செய்து கையொப்பம் இட்டு வழங்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், அதனை சமர்ப்பித்ததற்கான ஒப்புகை ரசீதையும் மறக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.