சென்னை: தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுவதற்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்திலும் 97,37,832 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 97.37 லட்சம் பேரில், இறந்த வாக்காளர்கள் 26,94,672 பேர், உரிய முகவரியில் இல்லாதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவுகள் 3,39,278 பேர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து வழங்கினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதிதாக பெயர் சேர்ப்பவர்களுக்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க தமிழகத்தில் வாரம் இரண்டு முறை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை நியமித்து இந்தப் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், அந்த பகுதி பிஎல்ஓக்களை அணுகலாம் என்றும், வாக்குச் சாடிவகளிலேயே முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இடம் மாறியவர்கள் படிவம் 8ஐயும், புதிதாக இணைய வேண்டியவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 14.25 லட்சம் பேர் நீக்கம்! 3ல் ஒரு பங்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.