நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில், நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மற்றவர்கள் மீது தொடுக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்கு. இவ்வழக்கில் நீதிபதி சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். பணப் பரிமாற்றம் குற்றமில்லை. நாள்தோறும் ஒவ்வொருவரும் பணப்பரிமாற்றம் செய்திறோம்.
சட்டவிரோதமான பணப் பரிமாற்றம்தான் குற்றம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த காவல் துறையும், புலனாய்வுத் துறையும் வழக்கு பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாத வழக்கில் அமலாக்கத் துறை ஒரு குற்றத்தைப் பதிவு செய்துள்ளது. வழக்கின் விசாரணையில் அமலாக்கத் துறை பெரும் பிழை செய்துள்ளது.
சட்ட விரோதமான பணப் பரிமாற்றம் நடக்கவில்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி வழக்கையே தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இது அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கை புத்திசாலியான அரசு இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சோனியா, ராகுல் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு வைத்துள்ள பெயர் காந்தியை விட பொருத்தமான பெயரா. பெயரை நீக்கியதன் மூலம் 77 ஆண்டுகளுக்குப் பின் மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார். காந்தி, நேரு நினைவுகளையெல்லாம் நீக்க முடியாது. நீக்க முடியும் என்று நினைப்பதே அபத்தமாகும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.