முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திடலில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் கட்டியிருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்வையிட வேண்டும் என்று இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 21) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திடலில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரையாற்றினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த நெல்லையின் அடையாளமாக விளங்குகிறது நெல்லையப்பர் கோயில். ஏழாம் நூற்றாண்டில், நின்றுசீர் நெடுமாறப் பாண்டியரால் கட்டப்பட்ட இந்த கோயிலை 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகளை செய்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேர் 1991-ல் தீ விபத்தில் எரிந்து போனது.

கடந்த பிப்ரவரி மாதம், நான் இதே நெல்லைக்கு வந்தபோது மீண்டும் அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று அறிவித்தேன். மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இப்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாள்களில், அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, மத்திய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்களுடைய எண்ணம் என்ன? தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் நடைபெறக் கூடாது; மீறி நடந்தாலும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்துவிடக் கூடாது! இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட, தமிழ் மீதும் – தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை எதிர்த்துதான் நாம் இன்றைக்கு உறுதியுடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்துவிட முடியுமா? நம்முடைய கடமையில் இருந்து நாம் பின்வாங்கிவிட முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது!

ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்! நாமும் தொடர்ந்து அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்! சான்றுகளை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுவிட்டால் மட்டும் போதுமா? அறிவுத்தளத்தில் மட்டும் போராடிக் கொண்டிருந்தால் போதுமா? அதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டு வைத்து இன்றைக்கு அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம்! 

13 ஏக்கர் நிலப்பரப்பில், 54 ஆயிரத்து 296 சதுர அடி பரப்பளவில், பொருநை அருங்காட்சி அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்! தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழினத்தின் தலைமை இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல, ஒரு தமிழனாகவும் நான் இன்றைக்கு பெருமைப்படுகிறேன். நான் இங்கே கேட்க விரும்புவது, உறுதியோடு உங்களை எல்லாம் நான் கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று, இந்த அருங்காட்சியகங்களை பார்க்க வேண்டும்! பார்ப்பீர்களா? பார்த்தே தீரவேண்டும். 

இந்த நேரத்தில், மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அறிவிப்பு வந்தது. அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்குப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சிவகலை உள்ளிட் அகழாய்வுகளை மேற்கொண்டு இப்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அதனால், இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தமிழ்நாட்டில் கட்டியிருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பார்க்கவேண்டும். இந்த கூட்டத்தின் மூலமாக, இந்த விழாவின் மூலமாக நான் அன்போடு அவர்களை அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால்தான் தமிழினுடைய நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மை கொண்டிருக்கிறது என்பது தெரியும். 

Chief Minister Stalin's speech at the event held on the grounds of Palayamkottai Government Medical College.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT