தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேச தகுதியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கிறாரா என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறேன். முதல்வர் கிறிஸ்துமஸ் விழாக்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார். ஆனால், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு ஒரு வாழ்த்துச் சொல்லக்கூட அவருக்கு மனமில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாகப் பாவிக்காத ஒருவருக்கு, மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடத் தார்மீக உரிமை கிடையாது.
எனவே, அந்த வார்த்தை முதல்வருக்குச் சற்றும் பொருத்தமாக இருக்காது என்பதுதான் என் எண்ணம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு வழக்கம் போலவே இதில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியது. இத்திட்டத்தைச் சீர்குலைப்பதே மாநில அரசுதான். ஆனால், பிரதமர் மோடி ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை 125 நாள்களாக உயர்த்தி உறுதி செய்துள்ளார்.
குறிப்பாக, அறுவடை மற்றும் நாத்து நடுதல் போன்ற முக்கிய விவசாயக் காலங்களில் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டத்தில் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. விவசாயிகளின் நலன் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் சமமாகப் பாதுகாக்கும் வகையில் பிரதமர் இத்திட்டத்தை வழிநடத்தி வருகிறார்.
மேலும், மாநில அரசின் தோல்விகளை மறைக்க மத்திய அரசு மீது முதல்வர் பழி போடுவதாகவும், பாஜக அரசு எப்போதும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழக முதல்வரின் நெல்லை வருகை மற்றும் அவரது அரசியல் விமர்சனங்களுக்கு பாஜக தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.