தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ’கொம்பு சீவி’ திரைப்படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன், நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமார், படத்தின் இயக்குநர் பொன்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒரு படத்தை தயாரித்து முடித்தவுடன் வேலை முடிந்தது என்று நினைக்காமல், அதை பிரமோஷன் செய்ய வேண்டும் என்ற சூழல் அதிகமாயிருக்கிறது. பாஜகவில் என்னுடைய பயணம் சிறப்பாக இருக்கிறது.
மாணவர்களுக்கு அரசியல் பற்று வேண்டும். நடிகர் விஜய் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவருடைய கட்சியின் கொள்கை, கோட்பாடு தொடர்பாக இதுவரை அவர் வெளியே தெரிவிக்கவில்லை. என்னைப்போல் நடிகர் விஜய்யும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேச வேண்டும். ஆனால் பேசவில்லை.
தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் விஜய் வீடு கட்டி தரும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் 10 லட்சம் கோடிக்கு மேலாக கடன் உள்ளது. இலவசத்திற்கு எதிராக நான் கருத்து சொல்லவில்லை. வீடு கட்டி கொடுப்பது தொடர்பான வழிவகை என்ன என்பதை நானும் கேட்கிறேன். ஊடகங்கள்தான் அவரை முன்னிலைப்படுத்துகிறது.
எதற்கெடுத்தாலும் அவரது கூட்டத்தில் அதிகமாக கூட்டம் இருப்பதுபோல ஊடகம்தான் செய்தி வெளியிட்டு வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் எங்களுக்குதான் சாதகமாக இருக்கும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நூறுநாள் வேலை என்பதை 125 நாள்களாக அதிகரித்து இருக்கிறார் பிரதமர்” என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ”வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி மாநிலத் தலைவர் தலைமையில் ராஜபாளையத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதில் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.