சென்னை புரசைவாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் உடனான ஆலோசனையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனத் தகவல் கூறப்பட்டது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காலை தமிழகத்திற்கு வருகைத் தந்தார்.
பாஜக நிர்வாகிகளின் மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தனியார் ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்துப் பேசியதாகவும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு 3 தொகுதிகளும், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைவதில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், அதிமுகவுக்கு 170 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், உரிமை மீட்புக் குழுவுடன் ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையின் முடிவில் கூட்டணி குறித்த முடிவில் தெளிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.