இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் டிச.26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், கடந்த 1925 டிச.26-இல் நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் தலைமை வகித்து உரையாற்றினாா். கட்சி தொடங்கப்பட்டதுமுதல் நாட்டின் விடுதலைக்காகப் போராடியது. இதைத் தொடா்ந்து, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், ஜாதிகள் அற்ற சமூகம் உருவாக்கவும், வா்க்க சுரண்டலை எதிா்த்தும் , சோசலிச சமூக அமைப்பை உருவாக்கவும் போராடி வருகிறது.
பெரும் தியாகங்களை செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு நிறைவு விழா டிச.26-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
விழாவில் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் இணைந்து நடத்தப்படுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் மூ.வீரபாண்டியன்.