தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
"மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கு தொடர்ந்து ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வருகிறேன். புதுச்சேரி ஆளுநராக இருந்தபோதும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறேன். எம்ஜிஆர் எனது திருமணத்தை நடத்தி வைத்தவர்.
எம்ஜிஆர் இருந்தவரை திமுக வெற்றி பெற்றதில்லை. இன்றைய காலகட்டத்தில் அவர் ஆசிர்வதிக்கும் கூட்டணி வெற்றி பெறும். அவரின் ஆசி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
திமுக கூட்டணி கட்சியினர் 100 நாள் வேலைத் திட்டத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு 125 நாள்களாக உயர்த்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தூய்மைஒ பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்துவதை ஆளும் கட்சி கண்டுகொள்ளாமல் உள்ளது. செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்கின்றனர்.
கொள்கைத் தலைவராக படத்தை வைத்துக் கொண்டு மரியாதை செலுத்தாமல் நேரில் வந்து மரியாதை செலுத்த வேண்டும், அவர்களைப் பின்பற்ற வேண்டும். மக்களோடு மக்களாக இருப்பவர்களுக்குத்தான் அங்கீகாரம் கிடைக்கும். எம்ஜிஆர் எப்படி மக்களுடன் பயணித்தாரோ அதுபோல் இருக்க வேண்டும்.
இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைத்ததே பிரதமர் மோடிதான். அதனால் இது வாக்குவங்கிக்காக அல்ல. அவர் ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து சொல்ல முடியாது.
எம்ஜிஆர் நினைவிடத்தில் சொல்கிறேன்.. தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆண்டவரும் ஆள்பவரும் பார்த்துக்கொள்வார்கள். ஆள்பவர்கள் என்று பிரதமர் மோடியைக் கூறுகிறேன். திமுகவைக் கூறவில்லை. திமுகதான் ஆண்டவர் வேண்டாம் என்று கூறுகிறார்களே..
திமுகவிற்கு உண்டியல் வேண்டும் ஆனால் ஆண்டவர் வேண்டாம்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.