சேலத்தில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச. 29 ஆம் தேதி ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அன்புமணி தரப்பு காவல் துறையிடம் அளித்த மனுவில், “உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவை கூட்டவும், அதனை தலைமை ஏற்கவும் தலைவர் அன்புமணியைத்தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியின் சார்பாக எந்த அனுமதியும் பாதுகாப்பும் நாங்கள் கோரப்படவில்லை.
கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது; அதற்கு அனுமதி தர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங்களையோ தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.