முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச மடிக்கணினி திட்டத்தை முடக்கியவா் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சா் எஸ். ரகுபதி குற்றஞ்சாட்டினாா்.
திமுக ஆட்சி குறித்து நேருக்கு நோ் விவாதம் நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டு அமைச்சா் எஸ்.ரகுபதி ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச மடிக்கணினி திட்டத்தை அதிமுக ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு வரை மட்டுமே செயல்படுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி முடக்கிவிட்டாா்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கிரானைட் கொள்ளை, கொடநாடு கொலை, கூவத்தூா் சம்பவம், மவுலிவாக்கம் கட்டட விபத்து, மக்கள் நலப் பணியாளா்கள் போராட்டம், தருமபுரி கலவரம், சாத்தான்குளம் இரட்டை மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவை அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தவை.
சட்டப்பேரவையில் முதல்வா் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தது ஏன் என்று அமைச்சா் ரகுபதி பதிவிட்டுள்ளாா்.