கூட்டணி மற்றும் வெற்றி மூலமாக அன்புமணிக்கு வரும் தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும் என பாமக தலைவர் ராமதாஸ் கண்ணீருடன் பேசினார்.
சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அன்புமணியின் மோசமான செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் சிந்தினார். அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி ராமதாஸை தேற்றினார்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது,
"இன்றைய கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். 2025 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கிறோம், 2026 வரவேற்கிறோம்.
இன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படுமா? என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கூட்டணி குறித்து கேட்பவர்களிடம் 'ராமதாஸ் நல்ல முடிவு எடுப்பார், அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்' என்று கூறுங்கள்.
கூட்டணி குறித்து கருத்து கேட்டிருக்கிறேன். இன்னும் காலம் கனியவில்லை. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
நான் வளர்த்த பிள்ளைகள், நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் என்னை மிகவும் மோசமாகத் தூற்றுகிறார்கள்.
நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை. அப்படி சரியாக வளர்த்திருந்தால் என்னை மார்பில், முதுகில் குத்தியிருக்கமாட்டார். அவருக்கு ஒரு குறையும் நான் வைக்கவில்லை. மற்ற தகப்பனைவிட அதிகமாக அவருக்குச் செய்திருக்கிறேன்.
சில்லறை பையன்களை வைத்துக்கொண்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த ஜி.கே. மணியை அன்புமணி அவமானப்படுத்தினார். தொடர்ந்து என்னையும் நேரடியாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அன்புமணி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என என்னுடைய மருத்துவர்களே கேட்கின்றனர்.
100க்கு 95% மக்கள் என்னுடன்தான் இருக்கின்றனர். அன்புமணியிடம் 5% மக்கள்கூட இல்லை.
இந்த தேர்தல் அவருக்கு சரியான பதிலடி கொடுக்கும். தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியைத் தரும். இந்த மக்கள் என்னை எப்போதும் கைவிட்டதில்லை. இனிமேலும் கைவிட மாட்டார்கள்.
இதுபோன்று ஒரு தகப்பன் உலகில் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார். எனக்கு இதற்கு மேல் பேச முடியவில்லை. அவரது செயல்பாடுகள் அப்படி இருந்தன.
எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். இந்த கூட்டம் நடைபெறும் திருமண மண்டபம் கிடைக்கக்கூடாது என்று சூழ்ச்சிகள் நடைபெற்றன. அதையெல்லாம் தாண்டி சிறப்பாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.