திமுக தலைமையிலான தமிழக அரசை விமர்சித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட பதிவால், அந்தக் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைவிட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
கனிமொழி பேச்சும், பிரவீன் சக்கரவர்த்தி பதிவும்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடந்த டிச. 24 ஆம் தேதி செய்தியாளர்களுடன் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, “அதிமுக ஆட்சியை விட்டு விலகியபோது, தமிழ்நாடு எந்தவித வளர்ச்சியும் இல்லாமல், கடன்சுமையால் சூழப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது திமுக தமிழ்நாட்டை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பான செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ள பிரவீன் சக்கரவர்த்தி,
”அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில், தமிழகத்தில்தான் நிலுவையிலுள்ள கடன் தொகை மிக அதிகமாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் கடன் தொகை தமிழகத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. தற்போது, தமிழகத்தின் கடன் தொகை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
வட்டிச் சுமை சதவீதமானது, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், கரோனாவுக்கு முந்தைய நிலைமையை விட இன்னும் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து:
“பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது எல்லாம் காங்கிரஸின் குரல் அல்ல. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தனிநபராக பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிக்கிறார். விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்ததற்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தியா கூட்டணி பலமாக இருக்கிறது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற மறைமுகமாக சில சக்திகள் வேலை பார்க்கின்றன. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
உ.பி.யையும், தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. ஏழை மக்களின் வீட்டை இடிக்கும் புல்டோசர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகின்றது. அவர் யோகியின் குரலாகப் பேசுகிறாரா?
பிரவீன் சக்கரவர்த்தி கூறிய புள்ளிவிவரங்கள் தவறானவை. 4.61 விழுக்காடு கடனில் அதிமுக ஆட்சி விட்டுச்சென்றது. அதனை 3 விழுக்காடாக குறைத்தது திமுக அரசு. இந்த நிதி ஆளுமையை பொறுத்துக் கொள்ளாமல் பேசுவது நியாமில்லை. காங்கிரஸில் இருந்து பாஜக குரலாகப் பேசுபவர்களை அனுமதிக்க மாட்டோம்.
தலித்துகள், சிறுபான்மையர்கள் இல்லாமல் ஆட்சி செய்வோம் என்று யோகி சொல்கிறார். இதனை பிரவீன் சக்கரவர்த்தி ஆதரிக்கிறாரா? இந்த தரவுகளே தில்லுமுல்லுதான். 2021-க்குப் பிறகு உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை தமிழகம் தலைமை தாங்குகிறது.
உ.பி.யில் நடக்கும் காட்டாட்சியை நியாயப்படுத்துபவர் எப்படி காங்கிரஸ்காரராக இருக்க முடியும்?. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் முடிவு எட்டப்படும்.” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பதிவு
”தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது.
கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடுகள், சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துதல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது.
மனித வள மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்ட பல கூறுகளில் உத்தரப் பிரதேசம் பின்தங்கி உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சியை முன்னிறுத்தி சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதற்குப் பதிலாக “புல்டோசர் ஆட்சி” நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தை எப்படி தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியும்?
கடன் குறித்துப் பேசும்போது அதன் பயன் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு பெற்றிருக்கும் கடன்கள் கல்வி, மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நீண்டகால முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தியுள்ளன.
மேலும், மத்திய அரசின் நிதிக் கொள்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வரி வருவாயில் மிகப் பெரிய பங்களிப்பு செய்யும் தமிழ்நாடு, நிதி பங்கீட்டில் அதற்கேற்ற அளவு பெறுவதில்லை; அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகளவிலான நிதிப்பங்கீட்டை பெறுவதோடு,ஒன்றிய அரசிடமிருந்து அனைத்து திட்டங்களுக்கும் தாராளமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுகின்றன.
ஆனால் தமிழ்நாடு தொடர்ந்து மத்திய பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. எத்தனை இயற்கைப் பேரிடர்கள் தமிழ்நாட்டை உலுக்கி எடுத்தாலும், மத்திய பாஜக அரசிடம் இருந்து நமக்கு உரிமையுள்ள, நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிதியைக் கூட பெற முடிவதில்லை. கல்வி, நூறு நாள் வேலை வாய்ப்பு நிதிஒதுக்கீடு ,ஏன் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கூட மறுக்கப்படுகிறது அல்லது தாமதமாகக் கொடுக்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளே ஆளுநர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கடன் பற்றி பேசலாம். ஆனால் அதை சூழல், தரவுகள் மற்றும் விளைவுகள் இணைந்த நிலையில்தான் பேச வேண்டும்.
வளர்ச்சி முடிவுகள், ஒருவருக்கான சராசரி குறியீடுகள், வரி பங்களிப்பு-பங்கீடு விகிதம், நிர்வாகத்தின் தரம் ஆகிய நோக்குகளில் பார்த்தால் தமிழ்நாடு தெளிவாக முன்னிலையில் உள்ளது.
நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பாஜகவிற்கு ஆயுதம் எடுத்துக் கொடுப்பது நமது வேலையல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதிவு
“மாநிலங்களை அவற்றின் மொத்தக் கடனைக் கொண்டு மதிப்பிடுவது, ஒருவரின் உடல் எடையைக் கொண்டு அவரது உடல் தகுதியை மதிப்பிடுவதற்குச் சமம்.
அதில் உயரம் இல்லை, தசை வலிமை இல்லை, வெறும் மேலோட்டமான பார்வை மட்டுமே உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிவு
“பொய் சொல்வது திமுகவுக்கு, குறிப்பாகப் பொய் சொல்வதில் முனைவர் பட்டம் பெற்ற கோபாலபுரம் குடும்பத்திற்கு, மிக எளிதான ஒரு விஷயம். தரவுகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட, 'இந்தியா' கூட்டணியில் உள்ள ஒரு கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இந்தத் திரிபுகளைப் பகிரங்கமாகக் கண்டிப்பது வரவேற்கத்தக்கது.
ஐந்தே ஆண்டுகளில், திமுக தமிழ்நாட்டின் கடனை இருமடங்காக உயர்த்தியுள்ளது. அதே சமயம், பற்றாக்குறையை ஈடுசெய்யவும், மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சிப் புள்ளிவிவரங்களைக் காட்டவும் கடன் வாங்கியதை வசதியாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
இருப்பினும், பெரிய கேள்வி என்னவென்றால், திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில் இருந்த பகிரங்கமான மோதல்கள் மீண்டும் தலைதூக்குவது போல் தெரிகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி - விஜய் சந்திப்பு
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பிரவீன் சக்கரவர்த்தி ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அதனை மறுத்தார். இந்த சந்திப்புக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்தார்.
இதனிடையே, பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு திமுக மூத்த நிர்வாகிகள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விமர்சனமோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.