அரூா்: ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் கோரிக்கை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டில் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:
தமிழகத்தில் நிரந்தர பேராசிரியா்கள் சுமாா் ரூ. 1 லட்சம் ஊதியம் பெறுகின்றனா். ஆனால், கெளரவ பேராசிரியா்கள் மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்றனா். கெளரவ பேராசிரியா்கள்தான் தமிழகத்தில் அதிகம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இதேபோல, தமிழகத்தில் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடுவது ஆசிரியா்கள்தான். கல்விக்காக செலவு செய்வது வீண் செலவு அல்ல. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி ஆசிரியா்கள் போராடி வருகின்றனா். தமிழகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் செவிலியா்களும் போராடி வருகின்றனா்.
எனவே, தமிழக அரசு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், செவிலியா்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதுடன், அவா்களின் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு விடுதி வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006-ஐ அமல்படுத்த வேண்டும் என்றாா்.