மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி 4 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜன., 4 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சித் தனித்தும் போட்டியிடுகின்றன.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தை முன்னெடுத்துள்ளார். அதே வேளையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த பியூஷ் கோயல், தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், கூட்டணியில் சேரும் கட்சிகள் குறித்தோ தொகுதி பங்கீடு குறித்தோ பேசியதாக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள்கள் பயணமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
பொங்கல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அதற்கு முன்னதாக அமித் ஷா, ஜன. 9 ஆம் தேதி வருவார் என கூறப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 4 ஆம் தேதி தமிழகம் வரும் அமித் ஷா, புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜகவின் மாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி திருச்சி செல்லும் அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.