ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வளாகத்தில் குற்றவாளிகளுக்கு மாற்றப்பட்ட வழக்கில் கைதான வழக்குரைஞா் ஹரிஹரனின் ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதித்து, அந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ஹரிஹரன். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பயன்படுத்தவிருந்த வெடிகுண்டுகளை உயா்நீதிமன்ற வளாகத்தில் வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றி கொடுத்ததாக, இந்த வழக்கின், 17-ஆவது குற்றவாளியாக போலீஸாா் இவரை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட ஹரிஹரன் 112 நாள்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை எழும்பூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது.
விசாரணை நிலுவையில் இருந்த போது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எழும்பூா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வழக்குரைஞா் ஹரிஹரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என ஹரிஹரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.