கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!
கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் கொண்டிருந்தார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அங்குச் சென்ற சிறுமியை 7 மாணவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி வீடு திரும்ப தாமதமானதால், சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் 7 கல்லூரி மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.