எடப்பாடி பழனிசாமி  கோப்புப்படம்.
தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ்

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை” என பிரயாக்ராஜில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்றும் இருமொழிக் கொள்கையே போதும் என்றும் அரசியல் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலரும் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில சட்டப்பிரிவுகள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'பிஎம்ஸ்ரீ' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் ரூ.5,000 கோடி நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு, மத்திய அரசு சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தில் வழங்கக்கூடிய பங்கு நிதியினை இந்த ஆண்டு திடீரென்று நிறுத்தியுள்ளது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் அறிவுசார்ந்த தலைவர்களால், குறிப்பாக பேரறிஞர் அண்ணா போன்றவர்களுடைய வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் மற்றும் சிறப்பு பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான் மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது.

இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அலுவல் மொழிகள் விதி 1976 வகுக்கப்பட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் தாய்மொழியான தமிழ், தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசும், தொடர்ந்து இந்த அரசும் கடைபிடித்து வருகிறது.

இத்தகைய அறிவுசார்ந்த முடிவினால்தான் தமிழ் நாட்டில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் பல உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க... உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: கமல்ஹாசன்

'உலகமயமாக்கல்' உள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள். ஆங்கிலம் அல்லாத பிற மாநிலங்களிலும், நாடுகளிலும்கூட அந்தந்த மொழிகளை தேவைக்கேற்ப கற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.

எனவே தமிழ் நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல், மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசின் நிதிப் பங்குடன் நிறைவேற்றும் திட்டங்கள் பல உள்ளன. இவையெல்லாம் அந்தந்த துறைகளில் உள்ள குறியீடுகளை அடைவதற்கான நோக்கத்தைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் மாநில அரசின் பங்கும் உள்ளது. கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறியீடுகளை தமிழ் நாடு தற்போதுள்ள திட்ட முறையிலேயே அடைந்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கை, தமிழ் நாட்டில் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, இதற்கு முன்பு ஆட்சி செய்த அஇஅதிமுக அரசும், தற்போதைய அரசும் சுட்டிக்காட்டி உள்ளன.

இத்தகைய ஆட்சேபனைக்குரிய சட்டப்பிரிவுகள் பற்றி மத்திய அரசு, மாநில அரசுடன் உடனடியாக விவாதித்து ஒரு இணக்கமான முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய, இதுபோன்ற முக்கியமான துறைகளில் செயல்படுத்தப்படும் 'சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டம்' போன்றவற்றுக்கான நிதியை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

இதனால், தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த அச்சமும், மத்திய அரசின் மீது வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர்.

எனவே, மத்திய அரசு இது போன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி மாற்றிக்கொண்டு, தமிழ் நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டப்பிரிவுகள் பற்றி விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேசமயம், கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டம் போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக மத்திய அரசை வலியுறுத்தி கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத்தான் தமிழ் நாட்டு மக்கள், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பி உள்ளார்கள் என்பதையும், திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க... ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது: அமைச்சர் சாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT