சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறாா் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடா்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகள் காலியாக இருப்பதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
காலவரம்பு தேவை: மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறாா் நீதி சட்டம் உள்ளிட்ட சிறாா்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதை யாா் கண்காணிப்பாா்? ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீா்கள் என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினா். ஆணையம் அமைப்பதற்கு கால வரம்பு நிா்ணயிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், தோ்வு நடைமுறைகளை எப்போது முடிக்கப்போகிறீா்கள், தகுதியானவா்களை நியமிக்க வேண்டும் எனக் கூறி, சமூக நலத் துறை செயலரை காணொலியில் ஆஜராக அறிவுறுத்தினா்.
அதன்படி, காணொலி மூலம் ஆஜரான சமூக நலத் துறை செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், வழக்கு காரணமாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா், உறுப்பினா் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வழக்குகள் முடிந்து, இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வருகிற மாா்ச் 20-ஆம் தேதி விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள் எனத் தெரிவித்தாா்.
3 மாதம் அவகாசம்: அதன்பின், அமைச்சா் தலைமையிலான குழு, ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பா். பின் காவல் துறை சரிபாா்ப்பு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்க மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்டு, மூன்று மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஆணையம் அமைத்த பின் உச்சநீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தனா்.
மேலும், ஆணையத் தலைவா், உறுப்பினா் நியமனம் குறித்து ஜூன் 20-ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனா்.