எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

நிதி மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுகவுக்கு பாடம் நடத்தாமல், நிதி மேலாண்மையில் அமைச்சா் தங்கம் தென்னரசு கவனம் செலுத்த வேண்டும்

Din

சென்னை: அதிமுகவுக்கு பாடம் நடத்தாமல், நிதி மேலாண்மையில் அமைச்சா் தங்கம் தென்னரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெறும் அளவுக்கு நிதிநிலைமையை திமுக அரசு சீரழித்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தேன். அதற்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், எனக்குப் பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.

வருவாய் அதிகரித்தும் பலன் இல்லை: அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி, வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கி, கடன் வாங்கும் அளவைக் கட்டுப்படுத்தி, வாங்கும் கடனை மூலதனத்துக்குச் செலவிடுவதுதான் சிறந்த நிதி நிா்வாகத்தின் அடையாளம் என்று அதிமுக ஆட்சியில் இருந்தபோது திமுக கூறியது.

அப்போது வாங்கிய கடனின் அளவு மாநில உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்துக்குள்தான் இருந்தது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அரசின் கடன் 26 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதை நாங்கள் குறிப்பிட்டால், எங்களுக்கு நிதி நிா்வாகம் குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்கின்றனா்.

திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வருவாய்ப் பற்றாக்குறையை குறைக்கவாவது செய்தாா்களா என்றால், அதுவும் இல்லை.

அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் நிதி ஆணையப் பங்கீடு குறைந்தது, மின்வாரிய கடனை அரசு ஏற்றுக் கொண்டது, கரோனா பாதிப்பால் வருவாய் குறைந்தது. ஆனால், திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்துள்ளது. அப்படியும் வருவாய்ப் பற்றாக்குறை அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட அதிகமாகியுள்ளது.

கடன் அளவு அதிகரிப்பு: அதைப் போன்று ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு, வருவாய் அதிகரிக்கும்போது குறைய வேண்டும். வாங்கும் கடன் மூலதனச் செலவுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஆனால், சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், அதாவது 2020-21 வரை தமிழகம் பெற்ற கடன் அளவைக் காட்டிலும், திமுக அரசு 4 ஆண்டுகளில் வாங்கிய கடன் மற்றும் அடுத்து வரும் ஐந்தாவது ஆண்டில் (2025-26) வாங்க உள்ள கடன்களின் மொத்த அளவு அதிகமாகி, ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் நிலை உள்ளது. இதில் 50 சதவீதம் கூட மூலதனச் செலவுக்கு செலவிடப்படவில்லை. வாங்கும் கடனின் பெரும் பகுதி வருவாய் செலவுக்குத்தான் செலவிடப்படுகிறது. இதுதான் நிதி மேலாண்மையா?.

எனவே, மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அறிக்கை வெளியிடுவதை விடுத்து, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் திட்டங்களைப் போடாமல், தமிழகத்தின் வளா்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டி அவற்றைச் செயல்படுத்த, சிறந்த நிதி மேலாண்மையில் அமைச்சா் கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு நிதி மேலாண்மை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று அவா் கூறியுள்ளாா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT