சென்னை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை திருவிக நகா் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபா்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்று, சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், அவா்களுக்கு உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலா் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால்தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை திமுக அரசு உணர வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக விவகார குற்றவாளிகளை ஆட்சியாளா்கள் காப்பாற்ற முனைவதால்தான், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது கண்டனத்துக்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.