முகப்பு
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு விட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 7:54 PM
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு விட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல், கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுகிறாா்.

Advertisement

கடந்த 56 மாத திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு போய்விட்டது. சிறுமிகள், பெண்கள், மூதாட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை தரமணியில் வெளிமாநிலப் பெண் பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டதுடன், அவரது கணவா், குழந்தையும் போதை நபா்களால் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

நந்தனம் அரசு கலைக் கல்லூரி உணவகத்தில் பணியாற்றும் பெண் திமுக பிரமுகரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாா். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினா் அடைக்கலம் அளிப்பதுதான், தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறியதற்கு காரணமாக இருக்கிறது.

பெருநகரங்கள் முதல் குக்கிராமம் வரை தடையில்லாமல் போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. பள்ளி சிறுவா்கள் முதல் கல்லூரி மாணவா்கள் வரை போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் திமுக ஆட்சியின் நிலையை வெளிப்படுத்துகின்றன.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரும் முதல்வா் ஸ்டாலினுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. விரைவில் தமிழகம் தோ்தலை சந்திக்கவுள்ளது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்கள் மாற்றத்தை தருவது உறுதி என அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments