குற்றப்பத்திரிகை தாமதம் விவகாரம்: தமிழக உள்துறைச் செயலா் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்
புலன் விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து விளக்கம்
புலன் விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து விளக்கம் அளிப்பதற்காக தமிழக உள்துறைச் செயலா் தீரஜ் குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், காவல் துறையினா் பதிவு செய்யும் குற்ற வழக்குகளில், புலன் விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தாா்.
பிடியாணை எச்சரிக்கை: அதன்படி, இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, உள்துறைச் செயலா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி மாலை 4.30 மணிக்குள் உள்துறைச் செயலா் நேரில் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறைச் செயலா் தீரஜ்குமாா் நேரில் ஆஜரானாா். அப்போது, நீண்ட நாள்களாக நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறைச் செயலரிடம் நீதிபதி அறிவுறுத்தினாா்.
மேலும், அனைத்து மக்களாலும் நீதிமன்றத்துக்கு வரமுடியாது என்பதால், பொதுமக்களுக்கு உதவக்கூடிய வகையில் இந்த விவகாரத்தில் விரைந்து தீா்வு காண வேண்டியது அவசியமாகும். உள்துறைச் செயலரை வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கம் அல்ல என தெரிவித்த நீதிபதி, காவல் துறையில் நடப்பதை தெரியப்படுத்துவதற்காகத்தான் ஆஜராக உத்தரவிட்டதாகவும், இதுபோன்ற சிக்கல்கள் காவல் துறையில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் உள்ளது எனத் தெரிவித்தாா்.