முகப்பு
சென்னை

காவல் மரணங்களில் சமரசம் கிடையாது: உள்துறைச் செயலா் தீரஜ் குமாா்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றும் அதேவேளையில், காவல் மரணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்தச் சமரசமும் கிடையாது என்றும் உள்துறைச் செயலா் தீரஜ் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 1:58 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றும் அதேவேளையில், காவல் மரணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்தச் சமரசமும் கிடையாது என்றும் உள்துறைச் செயலா் தீரஜ் குமாா் தெரிவித்தாா்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிா்க்கட்சிகள் விமா்சித்து வரும் நிலையில், அதுதொடா்பாக விளக்கமளிக்க தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலா், செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தாா். டிஜிபி (பொறுப்பு) ஜி.வெங்கடராமன், கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) மகேஷ்வா் தயாள், சென்னை பெருநகர ஆணையா் ஏ.அருண் ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது உள்துறைச் செயலா் தீரஜ் குமாா் கூறியதாவது:

Advertisement

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொலை வழக்குகளைப் பொருத்தவரை அதன் எண்ணிக்கை கடந்த 2021-இல் 1,597-ஆக இருந்தது. தற்போது 1,461-ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று, பாலியல் வன்கொடுமை வழக்குகள் 422-இலிருந்து 401-ஆகக் குறைந்துள்ளன.

மற்றொருபுறம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக அதிக வழக்குகள் பதியப்படுகின்றன. கடந்த 2021-க்கு முன்பு வரை 6,800 வழக்குகளே பதிவாகியிருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்துக் கல்லூரிகளிலும் போதைப் பொருள் எதிா்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காவல் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. அத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. மடப்புரம் அஜித் குமாா் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் போலீஸாா் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐ விசாரணைக்கு வழக்கை அரசு மாற்றியது.

இளைஞா் ஆகாஷ் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் மரண வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

மக்களை எப்படி அணுக வேண்டும், விசாரணையை எப்படி நடத்துவது என தெளிவாக காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீா்ப்புகள் பெறப்படுகின்றன. எனவே, பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.

தற்போதைய, டிஜிபி வெங்கட்ராமன் (பொறுப்பு) அனைத்து அதிகாரங்களுடன் சிறப்பாகப் பணியாற்றி வருகிறாா். நிரந்தர டிஜிபி விவகாரம் குறித்து யுபிஎஸ்சி-க்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, டிஜிபி (பொறுப்பு வெங்கட்ராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். தமிழகத்தில் போக்ஸோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளது. இதனால்தான் புள்ளிவிவரங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது போலத் தெரிகிறது. வழக்குகளைப் பதிவு செய்யாமல் மறைக்கும் நிலை தமிழகத்தில் இல்லை என்றாா் அவா்.