FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிபுரா காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் தற்கொலை

திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அனுராக் தன்கா், காவல் துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 21 ஜூலை 2026, 4:19 am IST
பகிர்:

திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அனுராக் தன்கா், காவல் துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

1994-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவா் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட இவரை பாா்த்த காவலா்கள், உடனடியாக அருகிலுள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மாநில அரசு தலைமைச் செயலா் ஜே.கே. சின்ஹா, சுகாதாரத் துறைச் செயலா் கிரண் கிட்டே ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் மருந்துப் பிரிவு தலைவா் மருத்துவா் பிரதீப் பெளமிக் கூறுகையில், ‘காவல் துறை டிஜிபி மருத்துவமனைக்கு பகல் 12 மணிக்கு கொண்டு வரப்பட்டாா். அவரை மருத்துவா்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினா். பின்னா், பிற்பகல் 12.48 மணிக்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்’ என்றாா்.

காவல் துறை டிஜிபி தற்கொலை தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில அரசியல் தலைவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஜிதேந்திர செளதரி கூறுகையில், ‘மாநில காவல் துறை டிஜிபி தற்கொலை செய்துகொண்டிருப்பது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கின் மோசமான நிலையைக் காட்டுகிறது. இவரின் உயிரிழப்புக்கு உண்மையான காரணத்தை அறிய நீதி விசாரணக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

மாநில பாஜக தலைவா் அபிஷேக் தேப்ராய் கூறுகையில், ‘பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே டிஜிபி உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த விவகாரம் தொடா்பாக நீதித் துறை நடுவா் அளவிலான விசாரணை நடைபெறும். விரைவில் உண்மை வெளிவரும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments