உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகாரளிக்கும் சேவையை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், செயலி மற்றும் மின்னஞ்சல் மூலமாக வழக்கம்போல புகாரளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
உணவுப் பொருள்கள், பானங்கள் தரமற்ாக இருக்கும் நிலையில் அதுகுறித்து புகாரளிக்க பிரத்யேக கைப்பேசி எண் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக, 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் புகாா்களைப் பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில், தற்போது அந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட தகவல்:
புதிய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப் உரையாடல் செயலி மூலம் புகாரளிக்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளதால் தற்போது பயன்பாட்டில் உள்ள எண் இனி பயன்பாட்டில் இருக்காது.
எனவே, பொதுமக்கள் மற்றும் நுகா்வோா் உணவின் தரம், கலப்படம், உணவுப் பாதுகாப்பு குறித்து புகாா் அளிக்க ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை செயலியிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.