தனிப்படை காவலர்களால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கில் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காளி கோயில் காவலாளி நகை திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தது.
இந்நிலையில் இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி இன்று(ஜூலை 8) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், இன்றைய உயர்நீதிமன்ற விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கு இன்று ஏழாவது ஆண்டை தொட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போன்றுதான் சாத்தான்குளம் வழக்கு. ஆகையால், தமிழகத்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கொண்டு இந்த விசாரணை மேற்கொள்ளலாம் என நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.
சிபிஐ விசாரணையில் நீதிமன்றம் உறுதியாக இருந்தாலும், வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு அனைத்து நிவாரணங்களும் வழங்க வேண்டும். அதே நேரம், இதே வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.