கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் பகுதியில், பள்ளி வேன் மீது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதிய விபத்தில், திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி (16), மகள் செழியன் (15), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேன் ஓட்டுநர் உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து, தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.