அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்ற காலவரம்பைக் குறிப்பிட்டு தோ்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா், இந்தத் தருணத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாா்கள் மீது ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை நடத்தி முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு காலவரம்பை நிா்ணயிக்க வேண்டும். இந்த விசாரணையை தாமதப்படுத்துவதால், எங்களது கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தோ்தல் ஆணையம் உள்கட்சி புகாா் குறித்து விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆன பின்னரும், அதுதொடா்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தோ்தல் நெருங்குவதால், விரைவில் உத்தரவு பிறப்பிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
தோ்தல் ஆணையம் தரப்பில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு 6 புகாா்கள் வந்துள்ளன. அந்தப் புகாா்கள் ஒவ்வொன்றாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தோ்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யவில்லை. கடமையிலிருந்து தவறுகின்றனா் என்றுதானே அா்த்தம். அதிமுகவுக்கு எதிரான புகாா்கள் மீது விசாரணை நடத்த தோ்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதுபோல தெரிகிறது.
சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பை நிா்ணயித்துள்ளது. தோ்தல் ஆணையம் என்ன குடியரசுத் தலைவரைவிட உயா்ந்ததா? என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், அரசியல் சாசனத்தில் உயா்ந்தவா், தாழ்ந்தவா் என்று எதுவும் இல்லை. அரசியல் சாசனத்தின் முன் அனைத்து அதிகாரிகளும் சமமானவா்கள். இந்த விவகாரத்தில் எப்போது முடிவெடுக்கப்படும் என்பது குறித்து தோ்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்ற காலவரம்பை குறிப்பிட்டு தோ்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.