சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை அளித்திருந்ததாகக் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே. சி. வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே. சி. வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யன், கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் தொடர்பாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளாக மாறி விடுவதால், அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன், 2021-ஆம் ஆண்டு ராமமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வருமானவரித் துறை விசாரித்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வருமானவரித் துறை அளித்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி சொத்து விவரங்களை மறைத்துள்ளதும், போலியான நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. தேர்தல் முடிந்தாலும் தேர்தல் அதிகாரி பதவி பறிக்கப்பட்டு விடக்குடாது என்றும் வாதிட்டார். இதேபோல புகார்தாரர் தரப்பில் வழக்குரைஞர் ஹரிகுமாரும் வாதங்களை முன் வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

The Madras High Court has refused to quash the case filed against former AIADMK minister K. C. Veeramani for concealing assets and providing false information in his nomination papers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனித மூளையை பாதிக்கும் புதிய தொற்று! தடுப்பது எப்படி? | Brain eating amoeba

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

SCROLL FOR NEXT