திருக்கோவிலூர்: திருவண்ணாமலை செல்லும் சாலையில் கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். மேலும் காரில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட டீ.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (44, இவர் விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகின்றார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை டீ.தேவனூரில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதற்காக காரில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை மாதவன் ஓட்டிச் சென்றுள்ளார்.
காரில் மாதவன் மனைவி மேனகா (35), அவரது மகள் கோஷிகா, சிவசங்கர் மனைவி சங்கீதா (30), பாலகிருஷ்ணன் மனைவி சுபா (55), ராதாகிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (70), முருகானந்தம் மகன் ராகவேந்திரன் (13) மேலும் இருவர் பயணித்தனர்.
கார் மணலூர்பேட்டை அடுத்த காட்டுக்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழந்து விட்டதாம். காரில் பயணித்த சங்கீதா (30), சுபா (55), தனலட்சுமி (70), ராகவேந்திரன் (13) உள்ளிட்ட நான்குபேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும், காரை ஓட்டிச் சென்ற ஆயுதப்படை பிரிவு போலீஸர் மாதவன், அவரது மனைவி மேனகா, மகள் கோஷிகா மற்றும் இருவர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.பார்தீபன், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ஜெ.பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
உடனே காயமடைந்தவர்களை 108 அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.