முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் இன்று ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகள் குறித்து நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று(புதன்கிழமை) காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களின் நிலை, மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உள்ள பயனாளிகளுடனும் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். மேலும் கோப்புகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.
இதுபற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் 2, 3 நாள்களில் வீடு திரும்புவார் என முதல்வரைச் சந்திக்கச் சென்ற அவரது சகோதரர் மு.க. அழகிரி இன்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.