திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையாளி சுர்ஜித் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இவர்களிடமும், இவர்களது பெண்ணிடமும் விசாரணை நடத்தியிருந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதாவது, கவின் கொலை வழக்குத் தொடர்பாக பதிவு செய்யப்பட் முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், இவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கவின் ஆணவக் கொலை வழக்கில், உதவி ஆய்வாளர்களாக உள்ள சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அவரது உடலை இரண்டாவது நாளாக இன்றும் வாங்க மறுத்து வருகிறார்கள்.
ஏன் இந்த ஆணவக் கொலை?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த விவசாயி சந்திரசேகா். இவரது மனைவி செல்வி. பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவா்களது மகன் கவின்குமாா்(26) சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், பாளையங்கோட்டை கேடிசி நகரைச்சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.
ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டை தனியாா் மருத்துவமனைக்கு கவின்குமாா் வந்தபோது, அந்தப்பெண்ணின் தம்பி சுா்ஜித் (24) தகராறு செய்து, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.