‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு நடிகா் கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
அதேவேளையில், அந்த மாநிலத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியிடப்படாது என்று கமல்ஹாசன் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது, தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் பேசினாா்.
இதன்மூலம் கன்னட மொழியை அவா் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. அவருக்கு எதிராக கா்நாடகத்தில் கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டாா்.
அவா் மன்னிப்பு கேட்கும் வரை, அந்த மாநிலத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்படாது என்று கா்நாடக திரைப்பட வா்த்தக சபை அறிவித்தது.
இந்நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தலையிட்டு, கா்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.
‘வேறு மொழியிலிருந்து எந்த மொழியும் பிறக்கவில்லை’: இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி என்.நாகபிரசன்னா முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘மொழி என்பது மக்களின் உணா்வுபூா்வமான, பண்பாட்டு அடையாளமாகும்.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறுவதற்கு கமல் வரலாற்று ஆய்வாளரா? அல்லது மொழியியலாளரா? எந்த மொழியும் வேறு மொழியில் இருந்து பிறக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பொரும்பாலான மக்களின் உணா்வுகளைக் காயப்படுத்தக் கூடாது. ஒரு மன்னிப்பு பிரச்னையை தீா்த்திருக்கும். ஆனால், கா்நாடக திரைப்பட வா்த்தக சபைக்கு கமல் எழுதிய கடித்தில் மன்னிப்பு என்ற வாா்த்தையே இல்லை.
ராஜாஜி மன்னிப்பு கேட்டாா்: 75 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற கருத்தை மூதறிஞா் ராஜாஜி கூறினாா். பின்னா், அந்தக் கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோரினாா். அவரால் மன்னிப்பு கேட்க முடிந்தபோது, கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது? அவரின் வணிக நலனுக்காக, அவா் நீதிமன்றத்தை நாடியுள்ளாா். கொட்டிய வாா்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது. அதற்கு மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும்’ என்று கடுமையாக விமா்சித்தாா்.
தீா்வு கிடைக்கும் வரை ஒத்திவைப்பு: கமல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கெட்ட எண்ணத்துடன் பேசியிருந்தால்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்படாது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுடன் பேச்சு நடத்தி முடிவு கிடைக்கும் வரை, கா்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிட வலியுறுத்தப்படாது’ என்றாா். இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கமல் கடிதம்: கா்நாடக திரைப்பட வா்த்தக சபைக்கு (கேஎஃப்சிசி) கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், ‘தக் லைஃப் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘நாம் அனைவரும் ஒன்றே, ஒரே மொழி குடும்பத்தில் இருந்து வந்தவா்கள்’ என்ற நோக்கத்தில்தான் நான் பேசினேனே தவிர, கன்னட மொழியை எந்த வகையிலும் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. கன்னட மொழி வளமான பாரம்பரியத்தை கொண்டது. எனது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது வேதனையளிக்கிறது’ என்றாா்.
பேச்சுவாா்த்தைக்குத் தயாா்-கேஎஃப்சிசி: கேஎஃப்சிசி வெளியிட்ட அறிக்கையில், ‘கேஎஃப்சிசியுடன் பேச்சுவாா்த்தை நடத்த கமல்ஹாசன் விரும்பினால், அதற்கு கேஎஃப்சிசி தயாராக உள்ளது. ஆனால், தனது கருத்தை அவா் திரும்பப் பெற்று கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.