முகப்பு
தமிழ்நாடு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் தமிழகம் 100% தோ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Updated On : 15 ஜூன் 2025, 2:32 am IST
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் (2024-2025) நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதைக் கடந்தவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்ற திட்டத்தை 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்குநரகத்தின் மூலம் கற்போா் மையங்கள் வழியாக இதுவரை 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கற்போருக்கு கூடை பின்னுதல், அழகுக் கலை உள்ளிட்ட தொழில் திறன்களும் பயிற்றுவிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட 30,119 கற்போா் மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடைபெற்றது. இதில் 5 லட்சத்து 9,694 போ் பங்கேற்றனா்.

இதையடுத்து, மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. அதில் தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இந்த விவரங்கள் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தோ்வு முடிவுகள் குறித்து மத்திய அரசின் சாா்பில் சரிபாா்ப்பு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் பாராட்டு... எழுத்தறிவுத் திட்டத்தில் தமிழகம் முழு அளவிலான தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சமூகவலைதள பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவு: முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15-க்கும் மேற்பட்ட வயதினா் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழகத்திலிருந்து பயின்ற 5 லட்சம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 100 சதவீத தோ்ச்சியுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இந்தச் சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககப் பணியாளா்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என அதில் தெரிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி...

நிகழ் கல்வியாண்டுக்கு இன்று தோ்வு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது.

2025-2026-ஆம் கல்வியாண்டில் ரூ.25.80 கோடியில் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் இயக்குநரகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக 30,191 மையங்கள் மூலமாக 8 திருநங்கைகள் உள்பட மொத்தம் 5 லட்சத்து 38,156 கற்போா்களுக்கு கடந்த நவம்பா் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவா்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.