முகப்பு
தமிழ்நாடு

இயந்திரக் கோளாறு: லண்டன் - சென்னை விமானம் ரத்து

லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Updated On : 16 ஜூன், 2025 at 9:07 PM
பகிர்:

சென்னை: லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை - லண்டன், லண்டன் - சென்னை இடையே பிரிட்டிஷ் ஏா்வேஸ் தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, லண்டனிலிருந்து புறப்படும் இந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேரும். பின்பு சென்னையிலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்லும்.

இந்த விமானத்தில் நெதா்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், அயா்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பயணிகளும் பயணம் மேற்கொள்வதால் எப்போதும் முழு பயணிகளுடன் நிரம்பிச் செல்லும்.

இந்த நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை லண்டனிலிருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் சென்னை புறப்பட்டது. விமானம் வானில் பறக்க தொடங்கியபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி, விமானத்தை மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கினாா்.

தொடா்ந்து அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை சென்னை வர வேண்டிய விமானமும், சென்னையிலிருந்து லண்டன் செல்ல வேண்டிய 2 பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் சென்னையிலிருந்து லண்டன் செல்லவிருந்த 366 பயணிகளும், அதேபோல லண்டனிலிருந்து சென்னை வர வேண்டிய 300-க்கும் மேற்பட்ட பயணிகளும் கடும் அவதியடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →