கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உள்ளது.
பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்புக் கருதி நான்கு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. அணையில் இருந்து வினாடிக்கு 15000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப் பிடிப்புப் பகுதிகள் மற்றும் கேரளத்தில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.
அணையின் மொத்த நீர் மட்டஉயரம் 100 அடி ஆகும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதையும் படிக்க. விபத்து கற்றுத்தந்த பாடம்! அவசர அழைப்புக்கு தங்கள் செல்போன் எண்ணை கொடுத்திருந்த பயணிகள்!
இந்த நிலையில் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியது. இதை அடுத்து அணையின் பாதுகாப்புக் கருதி வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மேட்டுப்பாளையம் ஓடந்துறை, சிறுமுகை, பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் மீன்பிடிக்கவோ துணி துவைக்கவும், குளிக்கவும் யாரும் இறங்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.