ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!
ஏடிஜிபி ஜெயராம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பற்றி...
உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
Advertisement
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடை நீக்கம் குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஜெயராம் ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற பரிந்துரைத்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க சிறிது நேரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.
தற்போது மீண்டும் விசாரணைத் தொடங்கிய நிலையில், ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற தமிழக அரசு தரப்பு ஒப்புக்கொண்டது.
இதனிடையே, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகே தன்னை அரசு இடைநீக்கம் செய்ததாகவும், முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றும் ஜெயராம் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.
தொடர்ந்து இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,
”1969 அகில இந்திய சேவைகள் ஒழுங்குமுறை விதிகளின் விதி 3(3) இன் கீழ் ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்யும் அதிகாரத்தை ஒழுங்குமுறை அதிகாரிக்கு இந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது. விசாரணையின் அடிப்படையில் மனுதாரரின் இடைநீக்கம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
வழக்கின் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம். அவரை கைது செய்யக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.