இன்றுமுதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும்
வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நாடு முழுவதும் 24,000 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒப்பந்தக் காலம் முடிவடையும் நிலையில், 2025 - 2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் பேச்சு நடத்தினர். அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வு அளிக்கப்படவில்லை. இதனால், தென்மண்டல அளவில் இயக்கப்படும் 4,000 டேங்கர் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.சுந்தரராஜன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு மார்ச் 1-இல் வெளியிடப்பட்டது. அதில், 2 அச்சு லாரிகள் புறக்கணிப்பு, கிளீனர் இல்லையென்றால் ரூ. 20,000 முதல் ரூ.40,000 வரை அபராதம், சிறிய விபத்து என்றாலும் 2 ஆண்டுகளுக்குத் தடை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
3 அச்சு லாரிகளுக்கு 25 சதவீதம், 2 அச்சு லாரிகளுக்கு 75 சதவீதம் தொழில்வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது மட்டுமே எங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய டேங்கர் லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதற்கு ரூ. 60 லட்சம் வரை செலவாகும்.
இதன் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறியும், கடந்த 24-ஆம் தேதிவரை விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய ஒப்பந்தத்தால் நாங்கள் நிறைய இழப்பைச் சந்திக்க நேரிடும். இதனால், வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.
எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து எரிவாயுவை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் 4,000 டேங்கர் லாரிகளும் வியாழக்கிழமை முதல் இயங்காது. புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலைநிறுத்தம் தொடரும். இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர், உணவுத் துறை அமைச்சர் ஆகியோர் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.