தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தாக அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் நேற்றிரவு சந்தித்தார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை தில்லி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மக்கள் பிரச்சினை, நிதி ஒதுக்கீடுக்காக மட்டுமே மத்திய அமைச்சரை சந்தித்தோம். கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும். தேர்தலில் போது என்ன சூழ்நிலை உள்ளதோ அதற்கு ஏற்றவகையில் கூட்டணி அமையும்.
இருமொழிக்கொள்கை தொடர நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினோம். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவரிடம் எடுத்துரைத்தோம். டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தினோம். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக கூட்டணி பற்றி பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விரிவாக விவாதித்தோம். காவிரி, முல்லைப் பெரியாறு திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினோம்” என்றார்.
இதையும் படிக்க: தேர்தல் விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு! குடியுரிமை இருந்தால் வாக்களிக்க அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.