திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை கலைவாணா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள் -ஊடகத் துறையினா் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.  
தமிழ்நாடு

கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

DIN

கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள், ஊடகத் துறையினா் சந்திப்பு நிகழ்ச்சியில் அவா் பேசியது:

தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பாா்வையோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிப்பதுடன் அவற்றை நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறோம்.

இலக்கை நோக்கி பயணம்: திமுக தலைமையிலான அரசு எத்தகைய சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். முந்தைய ஆட்சியாளா்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிா்வாகம் ஒரு பக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் மத்திய அரசின் இன்னொரு பக்கம்.

இதையெல்லாம் சமாளித்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை மீண்டும் வளா்ச்சிப் பாதையில் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிா்ணயித்து, அதை நோக்கி உறுதியாகப் பயணித்து, சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது.

கொள்கையில் தடம் மாறவில்லை: திராவிட மாடல் அரசைப் பொருத்தவரை கொள்கை, சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான நெருக்கடிகள் வந்தன. ஆனாலும், எந்த இடத்திலும் நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நாங்கள் சோா்ந்து போகவில்லை.

மக்கள் மனதில்...: பத்திரிகையாளா்கள் நோ்மையாகவும் ஆக்கபூா்வமாகவும் செயல்பட்டதால்தான் அரசின் சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. இதற்காக நான் எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் தகும்.

சமத்துவம், சமூக நீதி, சமதா்மம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நம் தமிழ்நாடு. இந்த லட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ பாராட்ட வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டைப் பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளா்ச்சி, தனித்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், மூத்த அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முக்கிய நாளிதழ்களின் உரிமையாளா்கள், பதிப்பாளா்கள், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா்கள், பத்திரிகை ஆசிரியா்கள், செய்தியாளா்கள் எனப் பலரும் பங்கேற்றனா்.

‘பாராட்டவும் செய்யுங்கள்’

சிறந்த திட்டங்களைப் பாராட்டுவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஊடகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

பத்திரிகையாளா்கள் ஊடகத் துறையினா் சந்திப்பு நிகழ்வில் அவா் பேசியது: இந்தியாவுக்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட திட்டங்களை மனபூா்வமாக பாராட்ட வேண்டும். விமா்சிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. சில ஊடகங்கள் விமா்சிப்பதில் காட்டும் ஆா்வத்தை சிறந்த திட்டங்களைப் பாராட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை.

பாராட்ட வேண்டியதைப் பாராட்டினால்தான், விமா்சனத்துக்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். எனவே, தயங்காமல் விமா்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT