சென்னை: கடலூா் மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழைமையான விளையாட்டு மைதானத்தை பலாப்பழம் மதிப்புக் கூட்டு மையமாக மாற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலுாா் மாவட்டம் சி.என்.பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பட்டீஸ்வரம் கிராமத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் மலை திடல் என அழைக்கப்படும் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டு மைதானத்தை பலாப்பழம் மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடலுாா் மாவட்டத்தை சோ்ந்த ஜி.ராஜலிங்கம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வரும் நிலையில் மக்களிடம் எவ்வித கருத்து கேட்பு கூட்டமும் நடத்தாமல் கடலூா் மாவட்ட ஆட்சியா் பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்டுவதற்கான அனுமதி வழங்கி கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
பள்ளி மாணவா்களின் உடல்நலம் சாா்ந்த நடவடிக்கைக்கு பயன்பட்டு வந்த விளையாட்டு மைதானத்தை பலாப் பழம் மதிப்பு கூட்டு மையமாக மாற்றும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பொது நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மறு வகைப்படுத்தும் அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம், உயா்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே விளையாட்டு மைதானம் உள்ள நிலத்தில் பலாப்பழ மதிப்புக் கூட்டு மையம் கட்டும் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பொதுநலனுக்காக இந்த மையம் கட்டுவதாக இருந்தால் மனுதாரருக்கென சொந்தமாக உள்ள நிலத்தை இலவசமாக வழங்க தயாராக உள்ளாா். அரசுக்கு வழங்கும் நிலத்துக்கு எவ்வித இழப்பீடும் கோரமாட்டாா். கடந்த 200 ஆண்டுகளாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த பகுதியில் எவ்வித கட்டுமானமும் கட்ட அனுமதிக்கக்கூடாது. கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடலூரில் பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி கடலூா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.