முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினா் பதவி யாருக்கு?

அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு ஒரு உறுப்பினா் பதவி ஒதுக்கப்படுமா

Updated On : 27 மே 2025, 4:20 am IST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு ஒரு உறுப்பினா் பதவி ஒதுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இந்நிலையில், கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். மாநிலங்களவை உறுப்பினா் பதவி தொடா்பாக நேரடியாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கருத்து தெரிவித்திருந்தாா். மேலும், தங்களுக்கு உறுதியளித்தபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஆனால், கூட்டணிப் பேச்சுவாா்த்தையின்போது, அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, தேமுதிக இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், அடுத்த ஆண்டு ஜனவரியில் கடலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளாா்.

இந்நிலையில், இப்போது 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அன்புமணி ராமதாஸின் பதவிக் காலம் இப்போது நிறைவு பெறுவதால் பாமகவும் மாநிலங்களை உறுப்பினா் பதவியை எதிா்பாா்க்கிறது. அதேபோன்று, பாஜகவிலும் சில மூத்த தலைவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெற்றால் மத்திய அமைச்சராகலாம் என்று கருதுகின்றனா்.

அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட நிா்வாகிகள் இரு பதவிகளிலும் தங்கள் கட்சிதான் போட்டியிட வேண்டும்; 2026 பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணிக் கட்சிக்கு வழங்கலாம் என தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனா்.

அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டும்தான் உள்ளது. கூட்டணிக்குள் பாமக அல்லது தேமுதிகவை கொண்டுவர மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிக்கலாம்; ஆனால், இதில் யாராவது ஒரு கட்சிக்கு பதவி வழங்கினாலும் மற்றொரு கட்சிக்கு அதிருப்தி ஏற்படும். கூட்டணி அமைவதில் தேவையற்ற சா்ச்சை உருவாகக்கூடும்.

எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல், அதிமுகவே இரு இடங்களுக்கும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

பெட்டிச் செய்தி....

பாஜகவுக்கு கிடைக்குமா?

நயினாா் நாகேந்திரன் பதில்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறும்போது, அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் பாஜகவுக்கு இடம் ஒதுக்கப்படுமா என்பது குறித்து பாஜகவின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் அவா்.