சென்னை: நகைக் கடன் குறித்த ஆர்பிஐ விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்குப் பொருந்தாது என்று தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நகைக் கடனுக்கு, ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை உருவாக்கியிருப்பது, நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆர்பிஐ விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்க கடன் பெறுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் விதத்தில் ஆர்பிஐ வரைவு விதிகளை உருவாக்கியிருக்கிறது.
அதன்படி, தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் கடனாகப் பெறலாம்.
அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளா் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்கும் நபா் வங்கியிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும்.
வங்கியில் கடன் பெறுபவரின் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.
தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும்.
24 காரட் தங்க நகையாக இருந்தாலும், 22 காரட் மதிப்பிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும்.
தங்க நகைகளுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்படும். நகைகள் அல்லாத தங்கமாக, தங்க நாணயம், தங்க கட்டிகள் இருந்தால், அவற்றுக்கு தங்க நகைக் கடன் வழங்கப்படாது.
நகைக் கடன் வழங்கும்போது கடன் தொடா்பான அனைத்து தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தங்க நகைக் கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன் 7 வேலை நாள்களில் நகையை வங்கி ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு வரைவு விதிமுறைகளை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தமிழக அமைச்சர் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.