நகைக்கடன் விதிகள் போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களை இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வங்கியில் அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன், நகைக்கான ஆதாரம், நகைக்கான தரம், தூய்மை குறித்த சான்றுகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான நகைக் கடன் பெறுபவர்களுக்கு புதிய விதிகளில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும், புதிய விதிமுறைகளை அமல்படுத்த சிறிது கால அவகாசம் வழங்கி ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
தங்க நகைக் கடன் விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தங்க நகைக் கடன்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி.
விவசாயிகள், தினசரி வேலை செய்து வருமானம் ஈட்டுபவர்கள் என ரூ. 2 லட்சத்திற்கும் கீழ் கடன் பெறுபவர்களின் நலன்களைப் சரியான நேரத்தில் பாதுகாப்பதும் கடன் கிடைப்பதை உறுதி செய்வதும் எங்களின் நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது.
தற்போது விதிகளை தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தாலும், இதுபோன்ற அறிவிப்புகள் ஏழை மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இனி இதுபோன்ற விதிகள், கொள்கைகளை மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.