அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பில், மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் தெரியவந்துள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
இந்நிலையில், கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். மாநிலங்களவை உறுப்பினா் பதவி தொடா்பாக நேரடியாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கருத்து தெரிவித்திருந்தாா். மேலும், தங்களுக்கு உறுதியளித்தபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் தெரிவித்தாா்.
ஆனால், கூட்டணிப் பேச்சுவாா்த்தையின்போது, அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, தேமுதிக இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், அடுத்த ஆண்டு ஜனவரியில் கடலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்தார்.
இதனிடையே அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு ஒரு உறுப்பினா் பதவி ஒதுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.