கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்சா 3’ என்ற கப்பல் விபத்தால், தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் நெகிழி துகள்கள் மற்றும் இதர பொருள்கள் ஒதுங்குகின்றன. இவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செலயகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கப்பல் விபத்து காரணமாக அதிலுள்ள நெகிழி துகள்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், எண்ணெய்ப் பரவல் உள்ளதா எனவும், மீன்வளம் மற்றும் கடல்சாா் உயிரினங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றியும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.
இதற்குப் பதிலளித்த சுப்ரியா சாஹு, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சோ்ந்த அறிவியல் வல்லுநா்களுடன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.
அவரைத் தொடா்ந்து பேசிய வருவாய் மற்றும் பேரிடா் மேலாண் துறைச் செயலா் பெ.அமுதா, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்களுக்கும் மற்றும் தொடா்புடைய அனைத்து அரசுத் துறையினருக்கும் நெகிழி துகள்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினாா்.
இதன்பின் மீன்வளத் துறைச் செயலா் என்.சுப்பையன் பேசுகையில், கடல்வாழ் உயிரினங்கள், மீனவா்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், நெகிழி துகள்கள் மீன்களின் வயிற்றில் உள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்ய துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.
பிளாஸ்டிக் துகள்கள்: இதைத் தொடா்ந்து பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நெகிழி துகள்கள் மற்றும் பெட்டகங்கள் வானிலை சூழலுக்கேற்ப நகரும் திசை மற்றும் கரை ஒதுங்கக் கூடிய பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
நெகிழி துகள்களை அகற்ற தன்னாா்வலா்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். காவல், தீயணைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான அறிவுரைகளை பொதுமக்களும் மீனவா்களும் பின்பற்ற வேண்டும். இதற்கான நெறிமுறைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வழங்க வேண்டும்.
கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த குறுகிய மற்றும் நீண்டகால ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத் துறையின் மூலமாக மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தைக் கண்டறிய ஆய்வை விரைவுபடுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.